முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜனவரி 2027 › 6 ஜனவரி
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 6 ஜனவரி, 2027
புதன் · கிறிஸ்து பிறப்புக் காலம்
பண்டிகைகளும் புனிதர்களும்
கர்த்தரின் திருக்காட்சி
பெருவிழா · திருவழிபாட்டு நிறம்: வெள்ளை
அன்றைய வாசகங்கள்
முதல் வாசகம்
1எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது. 2இதோ, இருள் பூமியையும், காரிருள் மக்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 3உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். 4சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். 5அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும். 6ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள்.
பதிலுரைப் பாடல்
1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். 2அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். 7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். 10தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். 11எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். 12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 13எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.
இரண்டாம் வாசகம்
2உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே; 3அது என்னவென்றால் யூதரல்லாதவர்கள் நற்செய்தியினால் உடன்பங்காளிகளுமாக, ஒரே சரீரத்திற்கு உரியவர்களுமாக, கிறிஸ்துவிற்குள் அவர்பண்ணின வாக்குத்தத்தத்திற்கு உடன்பங்காளிகளுமாக இருக்கிறார்கள் என்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார். 5அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; 6இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
நற்செய்தி
1ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2“யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள். 3ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 4அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான். 5அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்: 6யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள். 7அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து: 8நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான். 9ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. 10அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். 11அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள். 12பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்