முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › நவம்பர் 2026 › 22 நவம்பர்
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 22 நவம்பர், 2026
ஞாயிறு · பொதுக்காலத்தின் 34-ஆம் வாரம்
பண்டிகைகளும் புனிதர்களும்
அனைத்துலக அரசராகிய நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து
பெருவிழா · திருவழிபாட்டு நிறம்: வெள்ளை
அன்றைய வாசகங்கள்
முதல் வாசகம்
11யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என்னுடைய ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். 12ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன்னுடைய ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன்னுடைய மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என்னுடைய ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரச்செய்து, 15என்னுடைய ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 16நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். 17என்னுடைய மந்தையே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.
பதிலுரைப் பாடல்
1தாவீதின் பாடல். யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன். 2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். 3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 5என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
இரண்டாம் வாசகம்
20கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். 21மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. 22ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 23அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 24அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 25எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும். 26அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம். 28அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
நற்செய்தி
31அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். 32அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். 34அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். 37அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? 38எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? 39எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 41அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; 43அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். 44அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.
இன்றைய புனிதர்கள்
- புனித செசிலியா, கன்னியர், மறைசாட்சி
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி A, வார நாள் ஆண்டு II.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்