முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜூன் 2027 › 4 ஜூன்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · மே 22 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 4 ஜூன், 2027
வெள்ளி · பாஸ்காவின் ஐந்தாம் வாரம் · தொனி 4
பண்டிகைகளும் புனிதர்களும்
Martyr Basiliscus the Bishop of Comana († c. 308)
நோன்பு நாள்
மீன் அனுமதி
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
நிருபம்
5அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். 6அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். 7மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். 8இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்; 9விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார். 10இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்? 11கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான். 12அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள். 13அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். 14தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே. 15அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது. 16எப்படியென்றால், மற்ற மனிதர்களும், என்னுடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட எல்லா மக்களும், கர்த்த்தரை தேடும்படி, 17நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 18உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. 19எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும், 20விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். 21ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான். 22அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே. 23இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்: 24எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால், 25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு, 26எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனிதர்களை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாகத் தோன்றியது. 27அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள். 28என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே. 29அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள். 30அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள். 31அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள். 32யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி, 33சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள். 34ஆனாலும் சீலாவிற்கு அங்கே தங்கியிருப்பது நலமாகத் தோன்றியது.
நற்செய்தி
17நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார். 18ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். 19இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது. 20அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள். 21வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். 22பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது. 23இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார். 24அப்பொழுது யூதர்கள் அவரை சூழ்ந்துகொண்டு: எவ்வளவு காலம்வரைக்கும் எங்களுடைய ஆத்துமாவிற்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாக சொல்லும் என்றார்கள். 25இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற செயல்களே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 26ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். 27என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது. 28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 22 மே சிவில் நாள்காட்டியின் 4 ஜூன் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்