Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › மே 2027 › 30 மே

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · மே 17 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 30 மே, 2027

ஞாயிறு · தொனி 4

பண்டிகைகளும் புனிதர்களும்

பாஸ்காவின் ஐந்தாம் ஞாயிறு

சமாரியப் பெண்ணின் ஞாயிறு

நோன்பு

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

காலை ஜெபத்தின் ஏழாம் நற்செய்தி

யோவா 20:1–10

1வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள். 2உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். 3அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். 4பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து, 5அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. 6சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து, 7துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான். 8முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான். 9அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள். 10பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

நிருபம்

அப் 11:19–26, 29–30

19ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்குமட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். 20அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கர்களுடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள். 21கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள். 22எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள். 23அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாக நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான். 24அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள். 25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவிற்குப் புறப்பட்டுப்போய், அவனைப் பார்த்து, அந்தியோகியாவிற்கு அழைத்துக்கொண்டுவந்தான். 26அவர்கள் ஒரு வருடம் சபைமக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டானது. 29அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். 30அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

நற்செய்தி

யோவா 4:5–42

5யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார். 7அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். 8அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார். 9யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும். 12இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள். 13இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். 14நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். 15அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். 16இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். 17அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். 18எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். 19அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன். 20எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள். 21அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது. 22நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது. 23உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார். 25அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். 27அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து: 29நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். 30அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். 31இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். 32அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார். 33அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள். 34இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது. 35அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 36விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். 37விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது. 38நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். 39நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள். 40சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். 41அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 42அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 17 மே சிவில் நாள்காட்டியின் 30 மே ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்