முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › நவம்பர் 2026 › 18 நவம்பர்
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 18 நவம்பர், 2026
புதன் · பொதுக்காலத்தின் 33-ஆம் வாரம்
பண்டிகைகளும் புனிதர்களும்
பொதுக்காலத்தின் 33-ஆம் வாரத்தின் புதன்
விருப்ப நினைவு · திருவழிபாட்டு நிறம்: பச்சை
அப்போஸ்தலர்களான புனித பேதுரு, புனித பவுல் பேராலயங்களின் அர்ப்பணிப்பு · விருப்ப நினைவு
அன்றைய வாசகங்கள்
முதல் வாசகம்
1இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது. 2உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது. 4அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். 5அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. 6அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. 7முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன. 8அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. 9மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, 10இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: 11கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்; நீரே எல்லாவற்றையும் படைத்தீர், உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.
பதிலுரைப் பாடல்
1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். 2அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 3எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். 5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். 6சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.
நற்செய்தி
11அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்: 12பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான். 13புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான். 14அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள். 15அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். 16அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். 17எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். 18அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். 19அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். 20பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன். 21நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான். 22அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே, 23பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி; 24அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான். 25அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள். 26அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார். 28இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி A, வார நாள் ஆண்டு II.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்