Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஆகஸ்ட் 2027 › 6 ஆகஸ்ட்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஜூலை 24 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 6 ஆகஸ்ட், 2027

வெள்ளி · பெந்தெகொஸ்தேக்குப் பின் ஏழாம் வாரம் · தொனி 5

பண்டிகைகளும் புனிதர்களும்

Martyr Christina of Tyre († c. 300)

நோன்பு நாள்

நோன்பு: எண்ணெயுடன்

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

மாலை ஜெபம்: வாசகம்

ஏசா 43:9–14

9சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும். 10நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. 11நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. 12நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார். 13நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 14நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார்.

மாலை ஜெபம்: வாசகம்

இந்த மொழிபெயர்ப்பில் இல்லை

மாலை ஜெபம்: வாசகம்

இந்த மொழிபெயர்ப்பில் இல்லை

காலை ஜெபம்: நற்செய்தி

லூக் 21:12–19

12இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள். 13ஆனாலும் அது நீங்கள் சாட்சி சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். 14ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். 15உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். 16பெற்றோராலும், சகோதரராலும், சொந்த மக்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். 17என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். 18ஆனாலும் உங்களுடைய தலைமுடியில் ஒன்றாவது அழியாது. 19உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

நிருபம்

1 கொரி 7:35–8:7

35இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். 36ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும். 37ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான். 38இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான். 39மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள். 40ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன். 8:1விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும். 2ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை. 3தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். 4விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும், 6பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம். 7ஆனாலும், இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுத்தமாக்கப்படுகிறது.

நிருபம் (புனித போரிஸ், புனித க்ளெப் ஆகியோருக்காக)

ரோமர் 8:28–39

28அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 29தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார். 31இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்? 32தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி? 33தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. 35“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும், 36கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? 37இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே. 38மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், 39உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.

நற்செய்தி

மத் 15:29–31

29இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார். 31ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

நற்செய்தி (புனித போரிஸ், புனித க்ளெப் ஆகியோருக்காக)

யோவா 15:17–16:2

17நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். 18உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 19நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 20வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள். 21அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். 22நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. 23என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 24வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள். 25காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது. 26பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். 27நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள். 16:1நீங்கள் இடறல் அடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 2அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்கு புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்கு ஊழியம் செய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 24 ஜூலை சிவில் நாள்காட்டியின் 6 ஆகஸ்ட் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்