Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஏப்ரல் 2027 › 16 ஏப்ரல்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · ஏப்ரல் 3 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 16 ஏப்ரல், 2027

வெள்ளி · பெரிய தவக்காலத்தின் ஐந்தாம் வாரம் · தொனி 4

பண்டிகைகளும் புனிதர்களும்

Venerable Nicetas the Confessor, Abbot of Medikion († 824)

பெரிய தவக்காலம்

கடுமையான நோன்பு (உலர் உணவு: ரொட்டி, காய்கறிகள், பழங்கள்)

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

ஆறாம் மணி ஜெபம்

ஏசா 45:11–17

11இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். 12நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். 13நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களை விலையில்லாமலும் லஞ்சமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். 14எகிப்தின் வருமானமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், உயரமான ஆட்களாகிய சபேயரின் வியாபார லாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார். 15இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் உண்மையாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர். 16சிலைகளை உண்டாக்குகிற அனைவரும் வெட்கப்பட்டு அவமானமடைந்து, ஏகமாகக் கலங்கிப்போவார்கள். 17இஸ்ரவேலோ, யெகோவாவாலே நிலையான காப்பாற்றுதலினால் காப்பாற்றப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

மாலை ஜெபம்: வாசகம்

ஆதி 22:1–18

1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான். 2அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார். 3ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரர்களில் இரண்டுபேரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டு, தேவன் தனக்குக் குறித்திருந்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். 4மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். 5அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரர்களை நோக்கி: “நீங்கள் கழுதையுடன் இங்கே காத்திருங்கள், நானும் சிறுவனும் அந்த இடத்திற்குப் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பி வருவோம்” என்றான். 6ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள். 7அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “என் மகனே, இதோ, இருக்கிறேன்” என்றான்; அப்பொழுது அவன்: “இதோ, நெருப்பும் விறகும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்”. 8அதற்கு ஆபிரகாம்: “என் மகனே, தேவன் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை அவரே கொடுப்பார்” என்றான்; அப்புறம் இருவரும் சேர்ந்துபோய், 9தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, தன் மகனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய விறகுகளின்மேல் அவனைப் படுக்கவைத்தான். 10பின்பு ஆபிரகாம் தன் மகனை வெட்டுவதற்காக தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். 11அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். 12அப்பொழுது அவர்: “சிறுவன்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் மகன் என்றும், உனது ஒரே மகன் என்றும் பார்க்காமல் எனக்காக ஒப்புக்கொடுத்ததால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது தெரிந்துகொண்டேன்” என்றார். 13ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, தனக்குப் பின்புறமாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் மகனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். 14ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 15யெகோவாவுடைய தூதனானவர் இரண்டாவது முறை வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: 16“நீ உன் மகன் என்றும், உனது ஒரேமகன் என்றும் பார்க்காமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்ததால்; 17நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகச்செய்வேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் எதிரிகளின் வாசல்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுவார்கள் என்றும், 18நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

மாலை ஜெபம்: வாசகம்

நீதி 17:17–18:5

17நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். 18புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். 19விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். 20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். 21மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. 22மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். 23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். 24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். 25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 26நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. 27அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். 28பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். 18:1பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். 2மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். 4மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். 5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 3 ஏப்ரல் சிவில் நாள்காட்டியின் 16 ஏப்ரல் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்