முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › டிசம்பர் 2026 › 25 டிசம்பர்
கத்தோலிக்க நாள்காட்டி
தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 25 டிசம்பர், 2026
வெள்ளி · கிறிஸ்து பிறப்புக் காலம்
பண்டிகைகளும் புனிதர்களும்
கர்த்தரின் பிறப்பு (கிறிஸ்துமஸ்)
பெருவிழா · திருவழிபாட்டு நிறம்: வெள்ளை
அன்றைய வாசகங்கள்
முதல் வாசகம்
7சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறாரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தியாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. 8உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாகக் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், யெகோவா சீயோனைத் திரும்பிவரச்செய்யும்போது, அதைக் கண்ணாரக் காண்பார்கள். 9எருசலேமின் பாழான இடங்களே, முழங்கி ஏகமாகக் கெம்பீரித்துப் பாடுங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். 10எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவா தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லோரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
பதிலுரைப் பாடல்
1பாடல். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது. 2யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார். 3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது. 4பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். 5சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள். 6யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
இரண்டாம் வாசகம்
1முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன், 2இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். 3இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 4இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார். 5எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? 6மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
நற்செய்தி
1ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. 2அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார். 3எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை. 4அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது. 5அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை. 6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான். 7அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான். 9உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. 10அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை. 11அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 13அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள். 14அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 15யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான். 16அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். 17ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது. 18தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்