Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › டிசம்பர் 2026 › 13 டிசம்பர்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · நவம்பர் 30 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 13 டிசம்பர், 2026

ஞாயிறு · தொனி 3

பண்டிகைகளும் புனிதர்களும்

பெந்தெகொஸ்தேக்குப் பின் 28-ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு நோன்பு

மீன் அனுமதி

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

மாலை ஜெபம்: வாசகம்

1 பேது 1:1–2:6

1இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், 2பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, இயேசுகிறிஸ்துவிற்கு கீழ்ப்படிவதற்காகவும், அவருடைய இரத்தம் தெளிக்கப்படுவதற்காகவும் தெரிந்துகொள்ளப்பட்ட அந்நியர்களாக இருப்பவர்களுக்கு எழுதுகிறதாவது: கிருபை உங்களோடு இருந்து, உங்களுடைய சமாதானம் பெருகட்டும். 3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 4தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார். 5கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 6இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 7அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும். 8நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து, 9உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள். 10உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்; 11தங்களுக்குள் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவிற்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்பு வரும் மகிமைகளையும் முன்னமே அறிவித்தபோது, இந்தக் காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் என்ன என்பதையும் ஆராய்ந்தார்கள். 12தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள். 13ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள். 14நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து, 15உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். 16நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 17அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள். 18உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல், 19குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. 20அவர் உலகம் உருவாவதற்கு முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்து, தமது மூலமாக தேவன்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். 21உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். 22ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்; 23அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. 24மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. 25கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. 2:1இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால், 2எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு, 3நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள். 4மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும், 5ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். 6அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.

மாலை ஜெபம்: வாசகம்

1 பேது 2:21–3:9

21இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார். 22அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை; 23அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார். 24நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 25சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள். 3:1அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 3முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல், 4அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது. 5இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 6அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். 7அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். 8மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து, 9தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.

மாலை ஜெபம்: வாசகம்

1 பேது 4:1–11

1இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள். 2ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான். 3கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம். 4அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள். 5உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள். 6இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. 7எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள். 8எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 9முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். 10அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். 11ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

காலை ஜெபத்தின் ஆறாம் நற்செய்தி

லூக் 24:36–53

36இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? 39நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் நம்பாமல் ஆச்சரியப்படும்போது: சாப்பிடுவதற்கு ஏதாவது இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக சாப்பிட்டார், 44அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார். 45அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களைப் பார்த்து: 46எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; 47அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. 48நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள். 49என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். 50பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார். 51அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைவிட்டுப் பிரிந்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். 52அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து, 53நாள்தோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.

நிருபம்

கொலோ 1:12–18

12ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், 13இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். 14குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. 15அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். 16ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. 17அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. 18அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.

நிருபம் (புனித அந்திரேயாவுக்காக)

1 கொரி 4:9–16

9தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம். 10நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள். 11இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம். 12எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம். 13நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம். 14உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 15கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன். 16ஆகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

நற்செய்தி

லூக் 13:10–17

10ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். 11அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள். 12இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, 13அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். 14இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். 15கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? 16இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். 17அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.

நற்செய்தி (புனித அந்திரேயாவுக்காக)

யோவா 1:35–51

35மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். 37அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள். 38இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம். 39அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி. 40யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். 42பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம். 43மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார். 44பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன். 45பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான். 46அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். 47இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார். 48அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார். 49அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார். 51பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 30 நவம்பர் சிவில் நாள்காட்டியின் 13 டிசம்பர் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்