Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › அக்டோபர் 2026 › 10 அக்டோபர்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · செப்டம்பர் 27 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 10 அக்டோபர், 2026

சனி · பெந்தெகொஸ்தேக்குப் பின் 19-ஆம் வாரம் · தொனி 1

பண்டிகைகளும் புனிதர்களும்

Martyr Callistratus and 49 Martyrs in his company († 304)

நோன்பு

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

நிருபம் (வெள்ளிக்கிழமைக்காக)

பிலி 1:27–2:4

27நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள். 28நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. 29ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 30நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு. 2:1ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால், 2நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். 3ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும். 4அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.

நிருபம்

1 கொரி 15:58–16:3

58ஆகவே, எனக்குப் பிரியமான சகோதரர்களே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாக இருக்காதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக. 16:1பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். 2நான் வந்திருக்கும்போது பணம் சேர்க்குதல் இல்லாதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவிற்கு ஏற்றபடி எதையாவது தன்னிடத்திலே சேர்த்துவைக்கவேண்டும். 3நான் வரும்போது உங்களுடைய உதவியை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் கடிதங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.

நற்செய்தி (வெள்ளிக்கிழமைக்காக)

லூக் 4:22–30

22எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள். 23அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். 24ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25அன்றியும் எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த நாட்களிலே மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு மழை இல்லாமல், தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலில் அநேக விதவைகள் இருந்தார்கள். 26இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான். 27அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள்; இருந்தாலும் சீரியா தேசத்தைச் சேர்ந்த நாகமானைத்தவிர அவர்களில் வேறு ஒருவனையும் எலிசா சுத்தமாக்கவில்லை என்று சத்தியத்தின்படி உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 28ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து, 29எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள். 30ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார்.

நற்செய்தி

லூக் 4:31–36

31பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் மக்களுக்குப் போதனை பண்ணினார். 32அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். 33ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். 34அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். 35அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது. 36எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 27 செப்டம்பர் சிவில் நாள்காட்டியின் 10 அக்டோபர் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்