முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › நவம்பர் 2027 › 5 நவம்பர்
ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · அக்டோபர் 23 (பழைய முறை)
ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 5 நவம்பர், 2027
வெள்ளி · பெந்தெகொஸ்தேக்குப் பின் 20-ஆம் வாரம் · தொனி 2
பண்டிகைகளும் புனிதர்களும்
Holy Apostle James, the Brother of the Lord († ca.63)
நோன்பு நாள்
நோன்பு: எண்ணெயுடன்
இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.
அன்றைய வாசகங்கள்
நிருபம்
8அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 9நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும், 10இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும், 11அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன். 12நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன். 13சகோதரர்களே, அதைப் பிடித்துக்கொண்டேன் என்று நான் நினைக்கிறதில்லை; ஒன்று செய்கிறேன், கடந்தவைகளை மறந்து, வருகிறவைகளைத் தேடி, 14கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். 15ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 16ஆனாலும் நாம் எதுவரைக்கும் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காக நடந்துகொண்டு, ஒரே சிந்தையாக இருப்போமாக. 17சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள். 18ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 19அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
நிருபம் (புனித யாக்கோபுக்காக)
11மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 12நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 13நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; 14என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். 15அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், 16தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்; 17எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். 18மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன். 19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
நற்செய்தி
1இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 2அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம். 5ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். 6சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள். 8பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு, 9அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: 11எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். 12அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 13கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும். 15வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,
நற்செய்தி (புனித யாக்கோபுக்காக)
54தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா? 56இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார். 58அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.
தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 23 அக்டோபர் சிவில் நாள்காட்டியின் 5 நவம்பர் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.
ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்