Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › ஜூன் 2027 › 22 ஜூன்

கத்தோலிக்க நாள்காட்டி

தினசரி வேதாகம வாசகங்கள் (கத்தோலிக்க) — 22 ஜூன், 2027

செவ்வாய் · பொதுக்காலத்தின் 12-ஆம் வாரம்

பண்டிகைகளும் புனிதர்களும்

பொதுக்காலத்தின் 12-ஆம் வாரத்தின் செவ்வாய்

விருப்ப நினைவு · திருவழிபாட்டு நிறம்: பச்சை

நோலாவின் புனித பவுலினுஸ், ஆயர் · விருப்ப நினைவு

புனித ஜான் ஃபிஷர், ஆயர், புனித தாமஸ் மோர், மறைசாட்சிகள் · விருப்ப நினைவு

அன்றைய வாசகங்கள்

முதல் வாசகம்

ஆதி 13:2, 5–18

2ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான். 5ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள். 6அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. 7ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். 8ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். 9இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான். 10அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. 11அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். 12ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான். 13சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள். 14லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். 15நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து, 16உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும். 17நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்றார். 18அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

பதிலுரைப் பாடல்

சங் 15:2–5

2உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. 3அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். 4ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான். 5தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

நற்செய்தி

மத் 7:6, 12–14

6பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள்; போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். 12ஆதலால், மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். 13குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள்; அழிவிற்குப்போகிற வாசல் அகலமும், வழி விசாலமுமாக இருக்கிறது; அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

இன்றைய புனிதர்கள்

பொது ரோமன் நாள்காட்டி; ஓர் ஆயர் பேரவை சில கொண்டாட்டங்களை (திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்) ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலாம் அல்லது தனது சொந்தக் கொண்டாட்டங்களைச் சேர்க்கலாம். வாசக நூல்: ஞாயிறு சுழற்சி B, வார நாள் ஆண்டு I.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்