Bible Explorer செயலியைப் பெறுக

முகப்பு › தினசரி வேதாகம வாசகங்கள் › நவம்பர் 2027 › 7 நவம்பர்

ஆர்த்தடாக்ஸ் நாள்காட்டி · அக்டோபர் 25 (பழைய முறை)

ஆர்த்தடாக்ஸ் தினசரி வாசகங்கள் — 7 நவம்பர், 2027

ஞாயிறு · தொனி 3

பண்டிகைகளும் புனிதர்களும்

பெந்தெகொஸ்தேக்குப் பின் 20-ஆம் ஞாயிறு

நோன்பு

நோன்பு இல்லை

இது துறவற விதியைப் பின்பற்றுகிறது. பங்குகளில், உடல்நலம், வயது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நோன்பின் அளவு ஒருவரின் ஆன்ம வழிகாட்டியுடன் சேர்ந்து தீர்மானிக்கப்படுகிறது.

அன்றைய வாசகங்கள்

காலை ஜெபத்தின் ஒன்பதாம் நற்செய்தி

யோவா 20:19–31

19வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 20அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, 22அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்; 23எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார். 24இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை. 25மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான். 26மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 27பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார். 28தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். 29அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். 30இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார். 31இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

நிருபம்

கலா 1:11–19

11மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 12நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 13நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; 14என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். 15அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், 16தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்; 17எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். 18மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன். 19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.

நற்செய்தி

லூக் 16:19–31

19செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான். 20லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி, 21அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று. 22பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். 23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். 24அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். 25அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். 26அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். 27அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக, 28நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 29ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். 30அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். 31அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

தேதிகள் ரஷ்யத் திருச்சபையின் ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றுகின்றன (செர்பிய, ஜார்ஜியத் திருச்சபைகளும் அதோஸ் மலையும் போல): திருச்சபை நாள்காட்டியின் 25 அக்டோபர் சிவில் நாள்காட்டியின் 7 நவம்பர் ஆகும். புதிய நாள்காட்டியைப் பின்பற்றும் திருச்சபைகள் (கிரீஸ், ருமேனியா, பல்கேரியா, உக்ரைன்…) நிலையான பண்டிகைகளையும் புனிதர்களையும் சிவில் தேதியிலேயே, 13 நாட்கள் முன்னதாகக் கொண்டாடுகின்றன, அவற்றின் சில வாசகங்கள் வேறுபடுகின்றன; ஈஸ்டரும் அதைச் சார்ந்த நாட்களும் ஒன்றே.

ஆதாரங்கள்: இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · © 2017, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, the speakers' labels in the Song of Songs and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · ஆதாரங்களும் உரிமைகளும்